Saturday, 20 December 2025

வரம் மறுப்பாயோ வடிவேலா

 சிலர் பார்வையில் நான் மனிதன் இல்லை,

சிலர் பார்வையில் நான் மிருகம் இல்லை,

சிலர் பார்வையில் நான் உதவிக்கில்லை,

சிலர் பார்வைக்கு நான் அவசியம் இல்லை.


சிலர் என் பேச்சுக்கு உடன்படவில்லை,

சிலருக்கு என் பேச்சே சரிப்படவில்லை,

சிலருக்கு என் குணம் பிடிபடவில்லை,

மௌனம் முயன்றும் வழியாகவில்லை


விடை அளித்தால் வாதம் ஆனது,

விடாமல் சொன்னேன் வீண் ஆனது,

விளக்க முற்பட்டேன் தவறானது,

விவரிக்க முயன்றேன் வெறுப்பானது


வாங்கிச் சென்றவன் வள்ளல் என்றான்,

கடன் மறுத்தபோது கஞ்சன் என்றான்,

வெஞ்சிச் சாடும்போது வஞ்சன் என்றான்,

வீழ்ந்து கிடந்தேன் — “வேண்டும்” என்றான்.


ஒளி வீச நினைத்த போதிலும் என் நிழல் மட்டுமே பிரகாசிக்குது,

விரல் சூப்பி வாழ்ந்த நாட்கள் என் கனவில் மட்டுமே பிரவேசிக்குது.


பெயர் நாட்ட உழைத்தேன், பிறருக்குப் போனது.

ஊருக்காக உழைத்தேன், எவருக்கோ சேர்ந்தது.


நொடி பொழுதும் வீடு மறந்து அலுவலகம் ஓடுகிறேன்,

இதற்கெல்லாம் என்ன பயன், தினம் என்னை கேட்கிறேன்.


சேர்க்கும் செல்வம் குடும்பத்திற்கு கூரை ஆனது.

ஆனால் அவர்களுடன் என் வாழ்க்கை சேராமல் போனது.


நாளை என் உதிரம் என்னை கேட்கும் — “என்னை வளர்த்தது நீயா?”

அன்று என் வாழ்க்கை தலை குனியும், என் ஓட்டமெல்லாம் பொய்யா?


ஊர் சொத்து களவாடியவனை காணிக்கையில் மன்னிக்கிறாய்;

ஈ, கொசுக்களை மட்டும் கொன்ற என்னை, ஏன் கண்டபடி தண்டிக்கிறாய்?


உன் பார்வைக்கு என் குமுறல் ஒரு சிறுபுள்ளியா?

ஊர் பார்வைக்கோ என் பிறப்பு ஒரு கரும்புள்ளியா?

என் பேச்சே பல பகைக்கு வழி வகுக்குமா?என் நிழலாவது என் இறுதி ஊர்வலம் கலந்துகொள்ளுமா?


இன்று வரை கூட்டிப் பெருக்கி எனது பாவக் கணக்கு பாராயோ?

சொர்க்கம் நரகம் உண்டாயின், என்னை எங்கு கொண்டு சேர்ப்பாயோ?


சூரனையே மன்னித்து உன் வாகனமாய் அமைத்தாயே,

இந்த கிறுக்கனை மட்டும் வெறுத்தொதுக்கி வீண்மகனாய் வைப்பாயோ?

— கார்த்தி